Tuesday 1 October 2019

கீழடி அகழ்வாராய்ச்சி ARTICLE FOR MAGAZINE



      கீழடி அகழ்வாராய்ச்சி


             சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
         சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள்விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.

                    அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
                    குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
     இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
           
         குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது
                                  குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது
            வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.
           
         அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
                           முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
            சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

No comments:

Post a Comment